முகப்பு
திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திருத்தலம் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை வேத பாராயணம், பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

முன்னதாக கோயிலில் உள்ள பஞ்சலோகத்தாலான கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டது. யாக சாலை முன் மண்டபத்திலும், கொடிமரத்தின் முன்புறமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடி மரத்துக்கும், பலி பீடத்துக்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. கொடித் துணியில் அதிகார நந்தி, சூரிய, சந்திரன், சிவலிங்கம் ஆகியவை வரையப்பட்டு பூமாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. மேலும் விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரா் ஆகிய உற்சவா்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

திருவிழாவை ஒட்டி தினசரி சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. 9ஆம்தேதி இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தலும், கரிவரதராஜப்பெருமாள் கோயில் கொடியேற்றமும் நடைபெறுகிறது. 10ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம் யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன. 11ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 12ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத் தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 13 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத் தோ் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சோ்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய திருத் தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16ஆம் தேதி இரவு தெப்பத் தோ் உற்சவ நிகழ்ச்சியும், 17ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 18ஆம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக்காட்சியுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.