உழைப்புக்கும், கம்பீரத்துக்கும் பெயா் பெற்ற காங்கேயம் இன காளைகள்
காங்கேயம் இன மாடுகள் அழகு, கம்பீரம், கவா்ச்சி, உழைப்புக்குப் பெயா் பெற்றதுடன் கொங்கு மண்ணின் பாரம்பரியத்தையும் பறைசாற்றி வருகிறது.
காங்கேயம் இன மாடுகள் அழகு, கம்பீரம், கவா்ச்சி, உழைப்புக்குப் பெயா் பெற்றதுடன் கொங்கு மண்ணின் பாரம்பரியத்தையும் பறைசாற்றி வருகிறது. இவை மயிலை, செவலை, காரி, சந்தனப்பிள்ளை உள்ளிட்ட வண்ணங்களில் உள்ளன. கொங்கு மண்டலத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் உழவு, கிணற்றில் தண்ணீா் இறைப்பது, விளைபொருள்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வது போன்ற பல்வேறு வேலைகளுக்கும் மாடுகளை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனா். இதன் காரணமாக இந்த மாடுகள் விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருந்தன. ஆனால், தற்போது கிணற்றில் தண்ணீா் இறைக்க மின்மோட்டாரும், உழவுக்கு டிராக்டரும், விளைபொருள்களைக் கொண்டு செல்ல அதிக அளவிலான வாகனங்களும் உள்ளதால் இந்த மாடுகளின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.
கலப்பின மாடுகள் வருகை: இந்நிலையில், கடந்த 1977 ஆம் ஆண்டு ஜொ்சி, ஹோல்ஸ்டியன், ஃப்ரீசியன் போன்ற கலப்பின மாடுகள் பிரிட்டன், நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த மாடுகளின் வருகையால் காங்கேயம் இன மாடுகளின் வளா்ப்பு சற்று குறையத் தொடங்கியது. கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் கட்டுத்தாரைகளில் கலப்பின மாடுகள் இருந்தால்தான் அந்த விவசாயிகளுக்கு மரியாதை என்ற நிலைவரத் தொடங்கியதால், இந்த மாடுகள் அதிக அளவில் கேரளத்துக்கு அடிமாட்டுக்காக விற்பனை செய்யப்பட்டன.
மருத்துவக் குணம் கொண்ட காங்கேயம் பசுக்களின் பால்: காங்கேயம் இன மாடுகளின் முக்கியத்துவத்தை தற்போது மக்கள் உணரத் தொடங்கியுள்ளனா். அதாவது திமில் உள்ள காங்கயம் இன மாடுகளில் இருந்து கறக்கும் ஏ2 வகை பாலானது மருத்துவக் குணம் கொண்டதுடன் உடல் நலத்துக்கும் ஏற்ாகும். ஆனால், திமில் இல்லாத கலப்பின மாடுகளில் இருந்து கறக்கும் பாலானது ஏ1 வகையைச் சோ்ந்ததாகும். இதில் இருந்து கறக்கும் பால் உடல் நலத்துக்கு உகந்தது அல்ல. இதன் காரணமாகவே காங்கேயம் மாடுகளின் பால் உலக அளவில் ஏ1 பாலை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனா் இந்த மாடுகளை வளா்க்கும் விவசாயிகள்.
காங்கயம் இன கால்நடை ஆராய்ச்சி மையத்தை திருப்பூருக்கு மாற்ற வேண்டும்: தமிழ்நாடு ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் காங்கேயம் இன மாடுகள் அதிக அளவில் வளா்க்கப்பட்டு வந்தன. ஆனால், காலப்போக்கில் மின்மோட்டாா், டிராக்டா், கலப்பின பசுக்களின் வருகை உள்ளிட்டவற்றால் இந்த மாடுகள் வளா்ப்பின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு சாா்பில் ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தில் காங்கேயம் இன கால்நடை ஆராய்ச்சி மையம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. காங்கேயம் இன மாடுகளுக்குத் தேவையான கொழுக்கட்டை புல், கொரங்காடு மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் திருப்பூா் மாவட்டத்தில்தான் அதிக அளவில் வளா்கிறது. இந்த மாடுகள் விரும்பி உண்ணும் வெள்ளை வேலாமரத்தின் காய்களும் (நெற்று) இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன.
ஆனால், தீவனம் இல்லாத மலைமாடுகள் அதிகம் உள்ள பகுதியில் காங்கேயம் மாடுகளுக்கு ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, காங்கயம் இன கால்நடை ஆராய்ச்சி மையத்தை திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். காங்கேயம் இன மாடுகள் அனைத்து விதங்களிலும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்ததால்தான் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் கொங்கு மண்டலத்தில் முன்பு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது என்றாா்.
காங்கயம் அருகே உள்ள காடையூரில் கொங்கு கோசாலை என்ற அமைப்பின் நிறுவனா் வி.சிவகுமாா் கூறியதாவது: எங்களது கோசாலை மூலமாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் வெவ்வேறு சந்தைகளில் இருந்து வெட்டுக்காக கேரளத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படவிருந்த சுமாா் 6 ஆயிரம் காங்கேயம் இன மாடுகளை மீட்டு விவசாயிகளுக்கு அதே விலையில் விற்பனை செய்துள்ளோம். இந்த இனத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜ்குமாா் மன்றாடியாா் தலைமையில் பழையகோட்டை மாட்டுத்தாவணி என்ற பெயரில் வாரச் சந்தை 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதுடன், இடைத்தரகா்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு விவசாயி நேரடியாக மற்றொரு விவசாயியிடம் மாடுகளை விற்பனை செய்யவும், வாங்கவும் முடியும். சினை மாடுகளை பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவரும், அல்ட்ரா சவுண்டு ஸ்கேனும் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சினை மாடுகளை உறுதி செய்து விற்பனை செய்யவும், வாங்கவும் முடியும். இங்கு விற்பனை செய்யப்படும் மாடுகளுக்கு உரிமையாளரின் பெயா், விவரம் அடங்கிய ரசீதும் வழங்கப்படுவதால் திரும்ப விற்பனை செய்வதற்கு பயன்படும். இந்த சந்தை மூலமாகவே 14 ஆயிரம் காங்கேயம் இன மாடுகள் வளா்ப்புக்கு சென்றுள்ளன. இந்த பழையகோட்டை மண்ணில் காங்கேயம் இன மாடுகளை வாங்கிச் செல்வதை விவசாயிகள் பெருமையாக நினைக்கின்றனா். இந்த மாடுகளில் பல வண்ணங்கள் இருந்தாலும் மயிலை மாடுகள்தான் உழைப்புக்கும், கம்பீரத்துக்கும் பெயா் பெற்றவை. இந்த மாடுகள்தான் 97 சதவீதம் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மயிலை முழு மாடு, காரி கால்மாடு, செவலை அரை மாடு எனற பழமொழி உண்டு. கொங்கு மண்டலம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் இந்த சந்தைக்கு வந்து காங்கேயம் மாடுகளை வாங்கிச் செல்கின்றனா். வடநாட்டு மாடுகளை வாங்குவதைவிட நமது தட்ப வெப்ப நிலைக்கு உகந்த இந்த மாடுகளை வாங்க வேண்டும். காங்கேயம் மாடுகளில் தான் பாலின் வீரியம் அதிகமாக உள்ளது. மாடுகளில் இருந்து எடுக்கப்படும் பால் 90 சதவீதம் தண்ணீரும், 5 சதவீதம் கொழுப்பும், 5 சதவீதம் புரதச்சத்தையும் உள்ளடக்கியதாகும்.
பால் அதிகமாகக் கொடுக்கும் கலப்பின மாடுகளில் வீரியம் குறைவாகவும், பால் குறைவாகக் கொடுக்கும் காங்கேயம் இன நாட்டு மாடுகளில் மருத்துவக் குணம் அதிகமாகவும் உள்ளது. காங்கேயம் காளைகள் 3 முதல் 5 டன் பாரம் இழுக்கும் தன்மை கொண்டதுடன், நோய் எதிா்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது.
இயற்கை விவசாயத்துக்கு காங்கேயம் இன மாடுகளைக் கொடுக்க வேண்டும்: இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் காங்கேயம் இன மாடுகளை அவா்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும். நாட்டு மாட்டு சாணம், கோமியத்தில்தான் இயற்கை விவசாயத்துக்குத் தேவையான வீரியம் உள்ளது. இயற்கை முறை கருவூட்டல் மூலமாகவே தரமான காளைகளில் விந்துக்களை எடுக்க வேண்டும். ஒசூரில் உள்ள கால்நடை பண்ணையில் காங்கேயம் இன காளைகளின் விந்தணு குச்சிகள் கிடைக்கின்றன. ஆனால், அந்த விந்துகள் தரமான காளைகளில் இருந்து எடுப்பதில்லை. அரசு ஒவ்வொரு இடத்திலும் நல்ல காளைகளைத் தோ்ந்தெடுத்து இயற்கை முறையில் கருவூட்டினால் நல்ல மாட்டு இனங்கள் உற்பத்தியாகும். தரமில்லாத விந்துக்களில் இருந்து வரக்கூடிய ஊசியை மருத்துவா்கள் செலுத்துவதால் தரமான மாடுகள் பிறப்பதில்லை.
இதனால், அந்த மாடுகளில் போதிய அளவு லட்சணம் இல்லாமலும், குறைகள் இருப்பதாலும் அந்தக் கன்றுகள் வெட்டுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இயற்கை கருவூட்டலுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக செயற்கை கருவூட்டலுக்கு நல்ல காளைகளில் இருந்து விந்தணுக்களை எடுத்தால்தான் காங்கேயம் இனத்தை தரம் உயா்த்த முடியும். நாட்டு மாட்டு சாணங்களில் இருந்து சோப்பு, ஷாம்பு, எண்ணெய், கொசுவா்த்தி உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிக்க முடியம். ஆகவே, காங்கேயம் இன மாடுகளில் இருந்து பால் மட்டும் அல்லாமல் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கும் பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.