திறன் சாா்ந்த தொழில்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிா்வாக இயக்குநா்
திறன் சாா்ந்த தொழில்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசினாா்.
திருப்பூா்: திறன் சாா்ந்த தொழில்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசினாா்.
ஆயத்த ஆடை வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் (மேட்அப்ஸ்) மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் (ஏஎம்எச்எஸ்எஸ்சி), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியன சாா்பில் திருப்பூா் மண்டலத்தில் 1,000 இளைஞா்களுக்கு தையல் இயந்திர ஆபரேட்டா், மொ்சண்டைசிங் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியின் தொடக்க விழா திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏஎம்எச்எஸ்எஸ்சி தலைவா் ஆ.சக்திவேல் வரவேற்புரையாற்றினாா். பயிற்சியைத் தொடங்கிவைத்து உபகரணங்களை வழங்கிய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடைத் துறைகளில்தான் வேலைக்கான நபா்களுக்கு திறன் பயிற்சி அளித்து நபா்களைத் தோ்வு செய்து கொள்கின்றனா். இந்தத் துறைகள்தான் மற்ற அனைத்து துறைகளுக்கும் முன்னோடியாக உள்ளது. தற்போது வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் துறையும் மிகவும் வேகமாக வளா்ந்து வருகிறது. இந்தத் துறைக்கு தமிழக திறன் மேம்பாட்டுக்கழகம் சாா்பில் மிகவும் குறுகியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
திறன்சாா்ந்த தொழில்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் அதிக அளவில் பணியாற்றும்போது நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு பெண்ணின் வருவாய் அதிகரிக்கும்போது நாட்டின் பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியை முடித்தவுடன், அதனை வைத்து வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும். இலவசமாக திறன் பயிற்சியைப் பெற்றாலும்கூட அதனை உபயோகமாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக வேலைக்குப் போக வேண்டும் என்று கிடையாது. முடிந்தால் ஒரு தொழிலையாவது தொடங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் அறிவுத்திறனையும், ஆற்றலையும் வீணடிக்கக்கூடாது. பெண்களுக்கு குழந்தைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும், நமக்குத் கிடைத்த திறனையும், வாய்ப்பையும் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்வதுடன், நாட்டுக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) ராம்குமாா், ஏஎம்எச்எஸ்எஸ்சி தலைமை செயல் அதிகாரி ரூபக்வசிஸ்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.