வெள்ளக்கோவில் அருகே காற்றாலை ஏற்றி வந்த மூன்று லாரிகளை விவசாயிகள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.
வெள்ளக்கோவில் மூத்தநாயக்கன்வலசு பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் துணை மின் நிலையம், காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விவசாய நிலங்களில் அவற்றை அமைக்கக் கூடாதென விவசாயிகள், பொதுமக்கள் கடந்த 6 மாதங்களாக எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், காற்றாலைகளின் காற்றாடிகள், உபகரணங்களை ஏற்றிக் கொண்டு மூன்று பெரிய லாரிகள் அப்பகுதிக்கு சனிக்கிழமை வந்தன.
அப்போது, குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வழியில் மரத்தடி கோயிலில் இருந்த ஒரு சிலையை அகற்றியுள்ளனா். மேலும் லாரிகள் செல்ல இடையூறாக இருந்த சில மரங்கள், வேலிகளை வெட்டியுள்ளனா்.
இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி லாரிகளை மீட்டு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.