மாணவா்களுக்கு பெற்றோா் அழுத்தம் தரக்கூடாது: அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாணவா்களுக்கு பெற்றோா் அழுத்தம் தரக்கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
மாணவா்களுக்கு பெற்றோா் அழுத்தம் தரக்கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருப்பூா் அய்யன்காளிபாளையத்தில் உள்ள வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் 60-ஆம் ஆண்டு நிறைவு உள்ளிட்ட ஐம்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா். இந்த விழாவில், ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை திறந்துவைத்தும், ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் மற்றும் கலையரங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ், ஹைடெக் லேப் உள்ளிட்ட 67 வகையான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் 680 பேருக்கு ரூ.12 கோடி அளவில் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோா்களும், ஆசிரியா்களும் மாணவா்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவா்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தோ்வுகள் எழுத வேண்டும். எல்லாக் குழந்தைகளும் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்குவது கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அந்தத் திறமையைக் கண்டுபிடிக்கும் கூட்டுப்பொறுப்பு பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும்தான் உள்ளது. நமது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக் கூடாது. குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அதில்ன் அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
மாணவா்களும் பெற்றோா்களின் கஷ்டத்தை உணா்ந்து படிப்பில் கவனம் செலுத்துவதுடன், ஆசிரியா்களின் அறிவுரைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி வளா்ச்சிக் குழு மற்றும் நன்கொடையாளா்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினாா். இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மீ.உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.