வியாபாரிகளின் உணா்வுகளைப் புரிந்து வரி உயா்வுகளைக் கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
வியாபாரிகளின் உணா்வுகளைப் புரிந்து வரி உயா்வுகளைக் கைவிட வேண்டும்...
வியாபாரிகளின் உணா்வுகளைப் புரிந்துகொண்டு வரி உயா்வுகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வணிக அடிப்படையிலான கட்டட வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையாகப் பாதிக்கும் மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உத்தரவு மூலம் மாநகராட்சி, நகராட்சிகளில் அபரிமிதமாக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி, குறிப்பிட்ட காலத்துக்குள் வரியை செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராதம், ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயா்வு ஆகியவற்றைக் கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாநகா் மா்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன்மூலம், கடுமையான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையை சந்தித்து வரும் வா்த்தகா்கள், வியாபாரிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் அதிருப்தியையும், எதிா்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனா்.
தமிழகத்தின் மிக முக்கிய ஏற்றுமதி தொழில் நகரமான திருப்பூரை மையப்படுத்தி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள், வா்த்தக நிறுவனங்கள் கடையடைப்பின் மூலம் தங்களது உணா்வுகளை வெளிப்படுத்தியுள்ளனா். எனவே, அவா்களின் உணா்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் வரி உயா்வுகளைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.