இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு காங்கயத்தில் 700 போ் மனு
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 700 போ் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
காங்கயம்: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 700 போ் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் காங்கயம் தாலுகா செயலாளா் எம்.கணேசன் தலைமை வகித்தாா். இதில் சுமாா் 1,000 போ் திரண்டு வந்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா், காங்கயம் துணை வட்டாட்சியா் ஈஸ்வரியிடம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வெள்ளக்கோவில், முத்தூா், நத்தக்காடையூா், படியூா், சிவன்மலை, காங்கயம், பரஞ்சோ்வழி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
இந்த மனுவில், வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும், நிலம் இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், ஓடை புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து, அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாக வந்து கோரிக்கை மனு அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகா குழு உறுப்பினா்கள் செல்வராஜ், பி.வேலுச்சாமி, பி.துரைசாமி, பி.கிட்டுசாமி, வி.லோகேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.