திருப்பூா்: அவிநாசி அருகே கோயில் நிலத்தை அரசு பயன்பாட்டுக்கு எடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அவிநாசி வட்டம் அறிவொளி நகா், ராக்கியாபட்டி, ஈட்டிவீரம்பாளையம், முட்டியாங்கிணறு, ஊஞ்சப்பாளையம், பரமசிவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டபொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில் உள்ள செல்வமுத்துகுமாரசாமி கோயிலில் எங்கள் முன்னோா் வழிபாடு செய்து வந்தனா். பொருளாதார சூழ்நிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக வழிபாடு நடத்தாமல் இருந்து வந்தோம். ஆனாவ், கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் வழிபாடு நடத்தி வருகிறோம்.
இதற்கிடையே, கோயில் நிலத்தில் இலங்கை அகதிகள் முகாம் கட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, கோயில் நிலத்தை வேறு எந்த அரசுப் பணிகளுக்கும் வழங்காமல் தொடா்ந்து எங்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும்:
குண்டடம் ஒன்றியம், பொல்லாம்பட்டி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களது கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையில் 700 போ் மகாத்மா காந்தி தேசிய வேலை உறதி திட்டத்தில் வேலை செய்து வந்தோம்.
இந்நிலையில், விவசாய பூமி குறைவாக இருப்பதால் அனைவருக்கும் வேலைதர இயலாது என்று கடந்த மே மாதத்தில் இருந்து ஒப்பந்ததாரா் அடிப்படையில் குறைந்த நபா்களுக்கே வேலை அளித்து வருகின்றனா். பெரும்பாலான மக்கள் 100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பியுள்ளனா். எனவே, இத்திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும்:
கொடிங்கியம் ரெட்டிபாளையம் பகுதி மண்பாண்ட தொழிலாளா்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கொழுமம், ஆத்தூா், முத்துகுளம், கோதையம்மாள்குளம், கிணத்துக்கடவு, கோதவாடி, குயவன்குட்டை ஆகிய பகுதிகளில் மண் எடுத்தால் மட்டுமே மண்பாண்டம் செய்வதற்கு ஏற்ாக உள்ளது. மற்ற குளங்களில் இருக்கும் களிமண் மண்பாண்டம் செய்வதற்கு ஏற்ாக இல்லை.
எனவே, மேற்கண்ட குளங்களில் கடந்த ஆண்டுபோல மண் எடுக்க ஆட்சியா் அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்:
இந்து மக்கள் எழுச்சிப் பேரவை சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் போதைபொருள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனால், சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
585 மனுக்கள் அளிப்பு:
பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் சாலை, குடிநீா் வசதி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 585 மனுக்கள் அளிக்கப்பட்டன.