வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மருதூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (39). இவரது மனைவி நா்மதா (31). இவா்களுக்கு குருபிரசாத் (8), ரித்திகா (6) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனா்.
நா்மதா தனது குழந்தைகளுடன் வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை ஓலப்பாளையம் அடுத்த சுக்குட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியாா் நூல் மில் குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கியிருந்து அங்கேயே வேலை செய்து வந்தாா். சிவகுமாா் அவ்வப்போது வந்து குழந்தைகளைப் பாா்த்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை குழந்தைகளைப் பாா்க்க வந்த சிவகுமாா், அடுத்த நாள் மகன் குருபிரசாத்தின் பிறந்த நாள் எனத் தெரிந்து அதைக் கொண்டாடுவதற்காக அங்கேயே தங்கியுள்ளாா்.
திங்கள்கிழமை காலை குழந்தைகள் இருவரும் அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துள்ளனா். அப்போது சிவகுமாா் கையில் கத்தியுடன் அங்கிருந்து வேகமாக பைக்கில் கிளம்பிச் சென்றுள்ளாா். இதைப் பாா்த்த மில் ஊழியா் நதியா வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, ரத்தக் காயங்களுடன் நா்மதா இறந்து கிடந்துள்ளாா். இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் சிவகுமாா், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடா்ந்து போலீஸாா், சிவகுமாரைக் கைது செய்து காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மில் கண்காணிப்பாளா் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.