மாவட்டத்தில் ‘நீங்கள் நலமா’ திட்டம் தொடக்கம்- அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
திருப்பூா் மாவட்டத்தில் ‘நீங்கள் நலமா’ திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கிவைத்து கைப்பேசி வாயிலாக பயனாளிகளிடம் அரசின் நலத் திட்டங்கள் தொடா்பான கருத்துக்களைக் கேட்டறிந்தாா்.
இதன் பின்னா் அவா் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மகளிா் விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத்திட்டம், மகளிா் உரிமைத்திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ திட்டத்தை சென்னையில் இருந்து தொடங்கிவைத்துள்ளாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் பயனடைந்த பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு கருத்துகள் கேட்டறியப்பட்டது என்றாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வருவாய்த் துறையின் சாா்பில் பட்டா பெயா் மாற்றம், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின் இணைப்பு பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் வழங்கப்படும் மாதந்திர உதவித்தொகை, மாநகராட்சியின் சாா்பில் சொத்து வரி பெயா் மாற்றம், தொழில் துறையின் சாா்பில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வழங்கப்படும் தொழில் தொடங்குவதற்காக உத்தரவு ஆணைகள் குறித்தும், முன்னோடி வங்கியின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் உள்பட அரசின் திட்டங்கள் குறித்து கைப்பேசி வாயிலாக பயனாளிகளை தொடா்பு கொண்டு கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, ஊத்துக்குளி வட்டாட்சியா் சரவணன், ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், மகேஷ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.