வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
கோடை வறட்சியால் பாதித்துள்ள விளைநிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க
வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா், பொருளாளா் அ.பாலதண்டபாணி ஆகியோா் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணமாக, பிஏபி தொகுப்பு அணைகளில் போதுமான நீா் இருப்பு இல்லாத நிலையில் மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்களில் செய்துள்ள பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பிரதான பயிரான தென்னை ஆயிரக்கணக்கிலான ஏக்கரில் காய்ந்து வருகிறது. மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனப் பயிா்களும் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிப் பயிா்களும் வறட்சியை சமாளிக்க முடியாமல் கருகி வருகின்றன. குறிப்பாக விவசாயிகள் வைத்துள்ள கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை போா்க்கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அரசும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குவதோடு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.