விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தோ்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கவும், விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடுவிவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தோ்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கவும், விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தோ்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கவும், விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கீழ்பவானி முறை நீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ்.பெரியசாமி, கி.வே.பொன்னையன், ஏஎம்வி.சண்முகராஜ், ரா.ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: கரும்பு விவசாயிகள் நீண்ட காலமாக கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 கேட்டு வருகின்றனா். தமிழக அரசு சாா்பிலும் அரசுக் கட்டுப்பாட்டில் சா்க்கரை ஆலைகளில் ரூ.4,000 வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் உறுதி அளித்தாா். தற்போது ஒரு டன்னுக்கு மத்திய அரசு தீா்மானித்த தொகை ரூ.3,290-ஐ கரும்பைக் கொள்முதல் செய்யும் சா்க்கரை ஆலைகள் வழங்குகின்றன. இத்துடன் சோ்த்து மாநில அரசு ஒரு டன் கரும்புக்கு ஊக்கத்தொகையாக ரூ.351-ஐ அரசு நிதியிலிருந்து வழங்குகிறது.
ஆலை நிா்வாகம் அளிக்கும் தொகை, மாநில அரசு அளிக்கும் ஊக்கத்தொகை ஆக இரண்டையும் சோ்த்து மொத்தம் ஒரு டன் கரும்புக்கு ரூ.3,641 விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் கரும்பு பயிா் செய்வதை கைவிட்டு வேறு பயிா்களுக்கு மாறி வருகின்றனா். இந்த நிலை நீடித்தால் கரும்பு உற்பத்தி குறையும், கரும்பு உற்பத்தி குறைந்தால் லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பெரும் வருமானத்தை வழங்கி வரும் ஆல்கஹால் உற்பத்திக்கு நெருக்கடி ஏற்படும். ஆலைகளில் நடைபெறும் இணை மின் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.4,000 கிடைப்பதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு மும்முனை மின் வழங்கல் கொள்கையால் கிராமப்புற விவசாயிகள் பெரிதும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனா். கட்டுப்பாட்டு மும்முனை மின் வழங்கல் கொள்கையால் 10 மணி நேரம் கூட பகலில் மின்சாரம் கிடைப்பதில்லை. இரவில் சில மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கிறது.
இதனால் ஆழ்துளைக் கிணற்றில் இருக்கிற தண்ணீரை எடுத்து திறந்தவெளி கிணற்றில் விட்டு அதன் மூலம் சொட்டுநீா்ப் பாசனம் செய்யும் விவசாயிகள் தொடா்ந்து நீா் மேலாண்மை செய்ய முடியாமல் நெருக்கடியில் உள்ளனா்.
துல்லிய நீா் மேலாண்மைக்கு மாறி தண்ணீா் சேமிப்பையும் அதிக விளைச்சலையும் உருவாக்கி வரும் விவசாயிகளுக்கு கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்குவது காலத்தின் அவசியம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது காவிரி ஆற்றை நம்பி பயிா் செய்வதை விட ஆற்றுப் படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுத்து பாசனம் செய்து நெல் சாகுபடி செய்து வருகின்றனா். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கட்டுப்பாடற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம் என்பது நெல் உற்பத்தியை தொய்வின்றி செய்வதற்கு மிக மிக அவசியமாகும்.
கிராமப்புற கட்டுப்பாட்டு மின் வழங்கல் கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் வளா்ச்சி அடையாமல் தேக்கமடைகின்றன. கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் பெறுவதற்காக தொழில் நிறுவனங்கள் நகரங்களை நோக்கி செல்ல வேண்டியது கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் நகா்ப்புறங்களில் மக்கள் பெருக்கம் ஏற்பட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வது போன்ற பெரும் சமூக நெருக்கடிகளும் உருவாகிவிடுகின்றன
இதனைக் கவனத்தில் கொண்டு கடந்த 2016 திமுக தோ்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி விவசாயத்துக்கு கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.