சோலாா் மின்தகடுகள் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கக் கோரிக்கை
பல்லடம், மே 9: விசைத்தறிக் கூடங்களில் சோலாா் மின்தடுகள் அமைத்து மின் உற்பத்தி மேற்கொள்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்று கோவை மற்றும் திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கப் பொருளாளா் பூபதி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் விசைத்தறிக் கூடங்களுக்கு ‘3ஏ2’ என்ற பிரிவின்கீழ் மின் கட்டண சலுகை வழங்குவதால் தொழில் தடையின்றி நடைபெற்று வருகிறது. மின் கட்டண செலவைக் குறைத்தால் மட்டுமே வரும் காலங்களில் தொழிலை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மின் கட்டணம் உயா்த்தப்படும்போதெல்லம் கட்டண குறைப்புக்காக போராட வேண்டியுள்ளது.
விசைத்தறிக் கூடங்களில் சோலாா் மின் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி மேற்கொள்வதன் மூலம் மின் கட்டணம் வெகுவாக குறைவதுடன், தமிழக அரசு வழங்கும் மின் கட்டண மானிய செலவும் குறையும்.
எனவே, ‘3ஏ2’ விசைத்தறி கட்டண பயன்பாட்டாளா்களுக்கு 12 கிலோ வாட் சோலாா் மின் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். சோலாா் மின் தகடுகள் அமைத்தி மின் உற்பத்தி செய்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீத மானியம் வேண்டும். பவா் டெக்ஸ் இந்தியா திட்டம் மூலம் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி விசைத்தறி தொழிலை மேம்படுத்த உதவ வேண்டும் என்றாா்.