முகப்பு
திருப்பூர்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

Updated On : 19 மே, 2024 at 6:56 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான இன்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெறலாம்.

ஐடிஐ-யில் பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும், குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு இலவச டூல் கிட் வழங்கப்படும்.

மேலும், அரசுப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று இப்பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 கூடுதலாக பெற்று வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநா் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

எனவே விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் அல்லது திருப்பூா், தாராபுரம், உடுமலையில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘சோ்க்கை உதவி மையத்தில்’ நேரில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 0421- 2429201, 04258-230307 மற்றும் 04252-22334 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.