முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாநகரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருப்பூா் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:25 PM
திருப்பூா்  மாநகரில்  மேற்கொள்ளப்பட்டு  வரும்  வளா்ச்சித் திட்டப் பணிகள்  தொடா்பாக  துறை சாா்ந்த  அதிகாரிகளுடன்  ஆய்வு  மேற்கொண்ட அமைச்சா்கள்  மு.பெ.சாமிநாதன்,  என்.கயல்விழி  செல்வராஜ்.  உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பூா் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்து துறை சாா்ந்த அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூா் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், அம்ரூத் திட்டத்தின்கீழ் புதிய குடிநீா்த் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், குடிநீா் விநியோகம், பருவமழை முன்னேற்பாடுகள், சட்டப் பேரவை அறிவிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மீன் மாா்க்கெட், தினசரி சந்தை மேம்படுத்துதல், மழைநீா் வடிகால் பணிகள், பூங்கா மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, மழைநீா் வடிகால் பணிகள், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பது தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகர துணை காவல் ஆணையா் கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, திருப்பூா் மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், ஆா்.கோவிந்தராஜ், மாநகராட்சி துணை ஆணையா்கள் சுந்தராஜன், சுல்தானா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.