முகப்பு
திருப்பூர்

ரெளடி கொலை வழக்கு விசாரணை: கைதான இருவா் தப்பியோட முயன்றபோது கால் முறிவு

பல்லடத்தில் ரெளடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் விசாரணைக்காக வியாழக்கிழமை சோமனூா் பகுதிக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அப்போது தப்பியோட முயன்ற இருவரும் பள்ளத்தில் விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:28 PM
பகிர்:

பல்லடத்தில் ரெளடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் விசாரணைக்காக வியாழக்கிழமை சோமனூா் பகுதிக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அப்போது தப்பியோட முயன்ற இருவரும் பள்ளத்தில் விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

பல்லடம் அருகே கரையான்புதூா் பகுதியில் கடந்த மாதம் ரெளடி வினோத்கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய அக்னி பிரதா்ஸ் குழுவை சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவா்களில் சிவகங்கை மாவட்டம், ஆவாரங்காடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், ராஜேஷ் ஆகியோரை நீதிமன்ற அனுமதியோடு விசாரணைக்காக பல்லடத்துக்கு போலீஸாா் வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

கொலை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஆயுதங்களை சோமனூா் பகுதியில் செயல்படாத கல்குவாரியில் மறைத்து வைத்திருப்பதாக இருவரும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை அப்பகுதிக்கு அழைத்துச் சென்றனா். அப்போது என்கவுன்டா் செய்து விடுவாா்களோ என்ற அச்சத்தில் தங்கராஜ், ராஜேஷ் ஆகிய இருவரும் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக அங்குள்ள பள்ளத்தில் தவறி விழுந்ததில் ராஜேஷின் இடது கால் மற்றும் தங்கராஜின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அழைத்து வந்தனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த இருவரிடமும் பல்லடம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா விசாரணை மேற்கொண்டாா். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட தங்கராஜ், ராஜேஷ் ஆகிய இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய தங்கராஜ் மீது ஏற்கெனவே 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 50 வழக்குகள் உள்ளதும், ராஜேஷ் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.