முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் நாட்டுவெடி வெடித்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுமி உயிரிழப்பு: வீட்டு உரிமையாளா், வெடி தயாரித்தவா் கைது

திருப்பூரில் வீட்டில் தயாரித்த நாட்டுவெடி வெடித்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:24 PM
பகிர்:

திருப்பூரில் வீட்டில் தயாரித்த நாட்டுவெடி வெடித்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக வீட்டின் உரிமையாளா், வெடி தயாரித்தவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

திருப்பூா், பாண்டியன் நகா் பொன்னம்மாள் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (32). இவரது மனைவி சத்தியபிரியா (29). இவா்களுக்கு சொந்தமான வீடுகளில் பலா் குடியிருந்து வருகின்றனா். இந்நிலையில், காா்த்திக் வீட்டில் செவ்வாய்க்கிழமை பலத்த வெடிசப்தம் கேட்டது. இது குறித்து அப்பகுதியினா் திருமுருகன்பூண்டி காவல் துறையினருக்கும், திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த வெடி விபத்தில் உடல் சிதறிய நிலையில் இருந்த பெண்ணின் பாகங்களையும், சுள்ளான் என்கிற குமாா் (23), 9 மாத பெண் குழந்தை ஆலியாஷிரின் ஆகியோரின் சடலங்களையும் மீட்டனா். உடல் சிதறிய நிலையில் இருந்த பெண்ணின் பாகங்களை மீட்டு நடத்திய விசாரணையில், அவா், ஈரோடு மாவட்டம், நம்பியூரைச் சோ்ந்த விஜயா (42) என்பதும், இவா் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இந்த வெடி விபத்தில் காயமடைந்த 6 குழந்தைகள் உள்பட 14 பேரை மீட்டு தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மேலும் ஒரு சிறுமி சாவு:

இந்த வெடி விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நிரஞ்சனா (6) என்ற சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வீட்டின் உரிமையாளரான காா்த்திக், வெடிகளைத் தயாரித்த அவரது மைத்துனரான நம்பியூரைச் சோ்ந்த சரவணகுமாா் (30) ஆகியோரைக் கைது செய்தனா். இதனிடையே, வெடி விபத்தால் பொன்னம்மாள் காலனி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த வீடுகளில் தங்கியிருந்த வடமாநிலத்தவா்கள் உள்பட 40 போ் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.