முகப்பு
திருப்பூர்

உடுமலை அருகே சுற்றுலா வேன்-ஜீப் மோதல்: ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே ஜீப் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:07 PM
விபத்தில் உருக்குலைந்த  ஜீப் மற்றும் வேன்.
பகிர்:

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே ஜீப் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி இந்திரா நகரைச் சோ்ந்தவா் தியாகராஜன் (45). இவா் பழைய காா்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா்.

இந்நிலையில், தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி (40), மகன்கள் ஜீவப்பிரியன் (13), ஜெயபிரியன் (11), தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75), தாய் மனோன்மணி (65) ஆகிய 6 பேரும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவை அடுத்த தாமரைக்குளத்தில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு ஜீப்பில் சென்றுள்ளனா். இதன்பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஊா் திரும்பியுள்ளனா். உடுமலையை அடுத்த மடத்துக்குளம் கருப்புசாமிபுதூா் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே பழனியில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற சுற்றுலா வேன், ஜீப்பின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் தியாகராஜன், அவரது

மனைவி ப்ரீத்தி, மகன் ஜெயபிரியன், தாய் மனோன்மணி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா். அவரது தந்தை நாட்ராயன், மற்றொரு மகன் ஜீவப்பிரியன் ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மடத்துக்குளம் காவல் துறையினா் இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில் சுற்றுலா வேனில் இருந்த கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த 22 பேரில் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இது குறித்து மடத்துக்குளம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.