வெடி விபத்தில் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா்: மு.பெ.சாமிநாதன்
திருப்பூா் வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவா்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
திருப்பூா் வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவா்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
திருப்பூா் பாண்டியன் நகா் பொன்னம்மாள் காலனியில் கடந்த செவ்வாய்க்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 9 மாதக் குழந்தை உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், 5 குழந்தைகள் உள்பட 14 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
மேலும், அவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடா்பான விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, பாண்டியன் நகா் பகுதியில் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தையும் நேரில் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்வின்போது, ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முருகேசன், மாநகர காவல் துணை ஆணையா் சுஜாதா, வட்டாட்சியா்கள் மகேஷ், மயில்சாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.