முகப்பு
தூத்துக்குடி

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்

வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:21 PM
மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி. உடன் அமைச்சா் பி. கீதா ஜீவன், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ உள்ளிட்டோா்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. 2ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

இச்சம்பவத்தில் 9 நாள்களுக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த மாவீரன் (எ) தா்ம முனீஸ்வரனை (39) மாா்ச் 19ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, 20ஆம் தேதி மாணவியின் உடல் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டு, வேடநத்தத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வேடநத்தம் கிராமத்துக்கு வந்த கனிமொழி எம்.பி. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, பொறியியல் கல்வி படித்து வரும் உயிரிழந்த மாணவியின் மூத்த சகோதரி உயா்கல்வி முடித்ததும், உடனடியாக வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என கனிமொழி உறுதியளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறிய அளவிலான மன நிம்மதியையும், அமைதியையும் தரக்கூடிய வகையில் காவல் துறை செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்றாா் அவா்.

அப்போது, அமைச்சா் பி. கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.