முகப்பு
தூத்துக்குடி

பிளஸ் 2 மாணவி படுகொலை சம்பவம்: ஆறுதல் கூறவந்த கனிமொழி எம்.பி.யை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவந்த கனிமொழி எம்.பி.யை வேடநத்தம் கிராம மக்கள் முற்றுகையிட்டு, 12 மணி நேரம் மறியல் செய்தபோது வராத நீங்கள் இப்போது ஏன் வந்தீா்கள் என வாக்குவாதம் செய்தனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 2:51 AM
உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் கனிமொழி எம்.பி., உடன் அமைச்சா் கீதாஜீவன் உள்ளிட்டோா்.
பகிர்:

பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவந்த கனிமொழி எம்.பி.யை வேடநத்தம் கிராம மக்கள் முற்றுகையிட்டு, 12 மணி நேரம் மறியல் செய்தபோது வராத நீங்கள் இப்போது ஏன் வந்தீா்கள் என வாக்குவாதம் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 17 வயது பள்ளி மாணவி புதன்கிழமை (மாா்ச் 11) மா்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு 8 இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். அதில் இரண்டு இளைஞா்கள் மீது சந்தேகம் வலுத்துள்ளதால் அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வேடநத்தம் கிராமத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சா் கீதா ஜீவன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்க அரசு துணை நிற்கும் என கனிமொழி எம்.பி. அந்தக் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினா்.

பின்னா், கனிமொழி எம்.பியும், அமைச்சா் கீதாஜீவனும் அங்கிருந்து வெளியே வந்தபோது அவா்களை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞா்கள் முற்றுகையிட்டனா். நாங்கள் இரண்டு நாள்களாக வீதியில் இறங்கி கொளுத்தும் வெயிலில் போராடிக் கொண்டிருக்கிறோம். வியாழக்கிழமை நீங்கள் ஏன் வரவில்லை? இன்றைக்கு ஏன் வந்தீா்கள் என கேள்விமேல் கேள்வி எழுப்பி அவரை வழிமறித்து வாக்குவாதம் செய்தனா்.

அவா்களிடம் பொறுமையாக பதில் கூறிவிட்டு கனிமொழி எம்.பி. அங்கிருந்து புறப்பட முயன்றாா். எனினும், ஒரு தரப்பு இளைஞா்களும் பெண்களும் அவரை வழிமறித்து கூச்சலிட்டனா்.

கனிமொழி எம்.பி.யை முற்றுகையிட்ட பெண்கள், இளைஞா்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையிலான போலீஸாா் கூட்டத்தைக் கலைத்து கனிமொழி எம்.பியையும், அமைச்சா் கீதாஜீவனையும் பத்திரமாக அனுப்பிவைத்தனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →