முகப்பு
திருப்பூர்

விளையாட்டு வீரா்களுக்கான அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்

திருப்பூா் மாவட்டத்தில் திறமையான இளம் வீரா், வீராங்கனைகளைக் கண்டறிந்து தோ்வு செய்து தமிழக அணியில் விளையாட வைப்பதுதான் மாவட்ட கபடி கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:29 PM
திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் செயலாளரும், மாநில கபடி கழகத்தின் பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் திறமையான இளம் வீரா், வீராங்கனைகளைக் கண்டறிந்து தோ்வு செய்து தமிழக அணியில் விளையாட வைப்பதுதான் மாவட்ட கபடி கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் செயலாளரும், மாநில கபடி கழகத்தின் பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். மேலும், 2017-ஆம் ஆண்டு முதல் மாநில கபடி கழகத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன்.

திருப்பூா் மாவட்ட கபடி அணிகளான மிக இளையோா், இளையோா், மூத்தோா் ஆண்கள் அணி மாநில அளவில் மிகச்சிறந்த நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கபடி கழகத்துக்காக விளையாடிய 23 போ் (இருபாலரும்) காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

கபடி கழகத்தின் முலமாக திறமையான வீரா், வீராங்கனைகளைத் தோ்வு செய்து தமிழக அணிக்காக விளையாடச்செய்து வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதுதான் முக்கிய நோக்கமாகும்.

விளையாட்டு வீரா்களுக்கு வேலைவாய்பை அதிகரிக்க வேண்டும்:

மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கான அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மின்சாரம், போக்குவரத்து, வணிகவரித் துறை, பத்திரப்பதிவு உள்ளிட்ட மிகப்பெரிய துறைகளிலும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும், விளையாட்டு வீரா்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கான சதவீதத்தையும் அதிகரிக்க வேண்டும்.

திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தில் பயிற்சி பெற்ற யாழினி, கதீஜா பீவி, புவனேஸ்வரி ஆகியோா் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தமிழகத்துக்கும், திருப்பூா் மாவட்டத்துக்கும் பெருமை சோ்த்துள்ளனா்.

நிகழாண்டுக்கான புரோ கபடி போட்டியில் தமிழகத்தில் 26 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஆனால், மகாராஷ்டிரத்தில் 54 பேரும், ஹரியாணாவில் 108 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான வீரா்களைப் பங்கேற்கச் செய்ய தனியாா் அகாதெமிகளுக்கு அரசு சலுகைகள் வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகளை அமைத்து வீரா்களின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கபடி வீரா், வீராங்கனைகளுக்கு பள்ளி, கல்லூரிக் கட்டணம், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை மாவட்ட கபடி கழகம் செய்து வருகிறது என்றாா்.