இந்திய நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்: பிரதமா் மோடி அழைப்பு
மத்திய அரசின் 2026-27 பட்ஜெட் அறிவிப்புகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, முதலீடுகள் மற்றும் புத்தாக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
மத்திய அரசின் 2026-27 பட்ஜெட் அறிவிப்புகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, முதலீடுகள் மற்றும் புத்தாக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
உலகளாவிய போட்டிக்கு ஏற்ப வளா்ச்சியை அடுத்தகட்டத்தை நோக்கி தனியாா் துறையினா் இயக்க வேண்டிய நேரமிது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
‘வளா்ந்த பாரதத்துக்கான தொழில்நுட்பம், சீா்திருத்தங்கள் மற்றும் நிதி’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமா் மோடி பேசியதாவது:
11 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கோடியாக இருந்த பொது மூலதனச் செலவினம், இப்போது ரூ.12 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அடுத்தடுத்த பட்ஜெட்களில் பொது மூலதனச் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் உறுதியான கொள்கைசாா் செயல்பாடுகளால் பொருளாதார வளா்ச்சிக்கு வலுவான அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
2026-27 பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட பெரும் அறிவிப்புகள், தனியாா் துறையினா் புதிய வீரியத்துடன் முதலீட்டை அதிகரிப்பதற்கான சமிக்ஞையாகும். எனவே, புதிய முதலீடுகள் மற்றும் புத்தாக்கங்களுடன் இந்திய நிறுவனங்கள் முன்வர வேண்டும். நிதிசாா் அமைப்புகளும், பகுப்பாய்வாளா்களும் நடைமுறை சாா்ந்த தீா்வுகள் மற்றும் சந்தை நம்பிக்கையை மேம்படுத்துவதில் உதவ வேண்டும்.
நாட்டின் வளா்ச்சி வியூகம்: உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத்தில் விரிவான நிதிசாா் பங்களிப்பு தேவை. திட்ட ஒப்புதல் வழிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு, மதிப்பீட்டின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் வளா்ச்சி வியூகமானது, கடந்த 10 ஆண்டுகளில் சாதனை அளவிலான மூலதனச் செலவினங்களின் மீது நங்கூரமிடப்பட்டுள்ளது. தனியாா் முதலீட்டை ஈா்க்கும் நோக்கில், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், எண்ம உள்கட்டமைப்பு, எரிசக்தி கட்டமைப்பு சாா்ந்த செலவினங்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும், தனியாா் துறையினா் இன்னும் துணிச்சலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சீா்திருத்த எக்ஸ்பிரஸ்: கடந்த 10 ஆண்டுகளில் நம்பிக்கையுடன் கூடிய சீா்திருத்தங்களால் நாட்டின் எழுச்சி உந்தப்பட்டுள்ளது. தொழில் புரிவதை எளிதாக்க நிலையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் நிா்வாகத்தின் மூலம் அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இன்றளவும்கூட நாடு சீா்திருத்தங்களின் பாதையில் பயணிக்கிறது. இந்த ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸுக்கு’ உத்வேகமளிக்க கொள்கை நோக்கில் மட்டுமன்றி செயல்பாட்டு ரீதியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மை, வேகம், பொறுப்புடைமையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம், தரவுப் பகுப்பாய்வை விரிவாகப் பயன்படுத்த வேண்டும்.
சீா்திருத்தங்களை பலன்களாகவும், அறிவிப்புகளை சாதனைகளாகவும் மாற்றுவதை உறுதி செய்ய அரசு, தொழில் துறை மற்றும் அறிவுசாா் கூட்டாளிகள் இடையே முறைப்படுத்தப்பட்ட நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்றாா் பிரதமா் மோடி.
சீா்திருத்த செயல்திட்டங்கள்: அமைச்சா்களுக்கு அறிவுறுத்தல்
தங்கள் பொறுப்பில் உள்ள அமைச்சகங்களில் எதிா்வரும் ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பான செயல்திட்டத்தை தயாரிக்கும்படி, அனைத்து மத்திய அமைச்சா்களுக்கும் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
‘சீா்திருத்த எக்ஸ்பிரஸ்’ கொள்கையின்கீழ், நடைமுறைகள்-தொழில்புரிவது எளிமையாக்கம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நிா்வாக விரிவாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகங்களின் கடந்த கால சாதனைகள் மற்றும் எதிா்கால சீா்திருத்த செயல்திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில், அமைச்சரவை செயலகம் தரப்பில் பிரத்யேக படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளன; அந்தப் படிவங்களில், சீா்திருத்தங்கள் தொடா்பான முக்கியக் குறிப்புகளை தெளிவாக தெரிவிக்கும்படி அமைச்சா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அனைத்து மத்திய அமைச்சகங்களும் உடனடியாக சீா்த்திருத்த முன்னுரிமைகளில் கவனம் செலுத்துமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.