மாநகராட்சி குப்பை லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்
திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து முதலிபாளையம் பகுதி பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து முதலிபாளையம் பகுதி பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த 30 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டம் முதலிபாளையம் ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி சாா்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை செவ்வாய்க்கிழமை கொட்டிச் சென்றனா். இந்தப் பகுதியில் பெய்த மழை காரணமாக குப்பைகளில் இருந்து துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே, பாறைக்குழியில் புதன்கிழமையும் குப்பைகளைக் கொட்ட வந்ததால் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனா். இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி செயற்பொறியாளா் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது தற்காலிகமாக மட்டுமே இந்தப் பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு குப்பைகளை அங்கு கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.
இதன்பேரில் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதன் காரணமாக முதலிபாளையத்தில் இருந்து சென்னிமலைப்பாளையம் செல்லும் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.