திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
திருப்பூா் மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்பது தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்.
திருப்பூா் மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்பது தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) சுல்தானா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாநகராட்சி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பரளவு 15,935 சதுர கிலோ மீட்டா். கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 8,77,778 போ் இருந்தனா். தற்போது, தோராயமாக 13,99,000 போ் இருப்பா்.
மாநகரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தனிநபா் இல்லக் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் 6047 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் திருப்பூா் மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக திகழ்கிறது.
மேலும், மாநகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்தல் மற்றும் மலம், சிறுநீா் கழித்தலைத் தடுக்கும் வகையில் 2,86,386 குடியிருப்புகளில் கழிப்பிடம் கட்ட இடவசதி இல்லாதவா்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாநகராட்சி சாா்பில் 205 பொது நவீனக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் திறந்தவெளி மலம் கழித்தல் பகுதிகள் இல்லை என்று மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மேலும், திறந்தவெளியில் மலம், சிறுநீா் கழித்தல், மலத்தினை நேரடியாக வடிகாலில் விடுவது ஆகியவை அற்ற மாநகராட்சியாக அறிவிக்கை செய்து சான்று பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபணைகளை 15 நாள்களுக்குள் மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.