சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் -ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என அழைக்கப்படுவதுமான சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் ஸ்ரீவாலீஸ்வரா் கோயில் 1000 ஆண்டுகள் பழைமையானது. இக்கோயில் கும்பாபிஷேகம் கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சுவாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ராஜகோபுரம், வாலீஸ்வரா், அறம்வளா்த்த நாயகி, கல்யாணசுப்பிரமணியா், சிவகாமி அம்பாள் உடனமா் நடராஜப் பெருமான் கனக சபை, பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீா் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மூலவா் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை மாணவா்கள் உள்ளிட்ட சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் முழங்கினா். மேலும் அனைத்து சிவனடியாா்கள் திருக்கூட்டத்தினரின் கைலாய வாத்தியம் முழங்க கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து மாலை திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன. இதில் சிறப்பு அலங்காரத்தில் சோமாஸ்கந்தா் எழுந்தருளி அருள்பாலித்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், விழாக் குழுவினா் செய்திருந்தனா். விழாவையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.