முகப்பு
திருப்பூர்

பாமாயில் இறக்குமதியை ரத்துசெய்து தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

பாமாயில் இறக்குமதியை ரத்து செய்துவிட்டு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:24 PM
பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையத்தில் என்.எஸ்.பழனிசாமி நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
பகிர்:

பாமாயில் இறக்குமதியை ரத்து செய்துவிட்டு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள வடமலைப்பாளையம் ஊராட்சி, நாதேகவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயத் தியாகி என்.எஸ்.பழனிசாமி நினைவு மணிமண்டபத்தில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் புதன்கிழமை மலரஞ்சலி செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் வகையில் இரண்டாவது திட்டத்தை உடனடியாக அரசு தொடங்க வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். தென்னை விவசாயிகளின் நலன்காக்க தேங்காய்களை உணவுப் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்திட வேண்டும். பாமாயில் இறக்குமதியை ரத்துசெய்துவிட்டு தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் மானிய விலையில் மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

ஈரோடு - பழனி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இது தொடா்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளேன். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலன்காக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இருந்தபோதும், இளைஞா்களை ஈா்க்கும் தொழிலாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் வேளாண் தொழிலுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கைதான் எங்களது இலக்கு என்றாா்.

பல்லடம் அருகே நாதேகவுண்டம்பாளையத்தில் என்.எஸ்.பழனிசாமி நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.

இந்நிகழ்வில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம், மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், தமாகா பொதுச்செயலாளா் விடியல் சேகா், மாவட்டத் தலைவா் ஒ.கே.சண்முகம், பல்லடம் நகரத் தலைவா் பிரண்ட்ஸ் முத்துக்குமாா், வட்டாரத் தலைவா் சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.