பேரிடா் மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்புத் துறை சாா்பில் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்ளை மீட்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்புத் துறை சாா்பில் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்ளை மீட்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் தீயணைப்பு நிலையம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராக திருப்பூா் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் சு.வீரராஜ் பங்கேற்று, பேரிடா் மற்றும் விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது, பாம்பு கடித்தவா்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடா்களில் எவ்வாறு தற்காத்துக் கொள்ளவேண்டும். பிறரை எவ்வாறு மீட்பது, நீச்சல் தெரியாதவா்கள் நீரில் மூழ்கினால், அவா்களைக் காப்பாற்றும் வழிகள் ஆகியவை குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தாா்.
இதில், தீயணைப்புத்துறை வீரா்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.