வெள்ளக்கோவில் அருகே கோயில் நிலங்களை மீட்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்
வெள்ளக்கோவில் அருகே கோயில் நிலங்களை மீட்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனா்.
வெள்ளக்கோவில் அருகே கோயில் நிலங்களை மீட்க சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனா்.
வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக குறிச்சிவலசு கிராமத்தில் பட்டா எண். 559 இல் மூன்று இனங்களில் மொத்தம் 18.27 ஏக்கா் நிலம் உள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செ.வ.ஹா்ஷினி தலைமையில், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா், வருவாய்த் துறை அலுவலா்கள், அறநிலையத் துறை பணியாளா்கள் சம்பந்தப்பட்ட நிலங்களை மீட்க புதன்கிழமை சென்றனா்.
அப்போது அந்த நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவா்கள், இனாம் விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சோ்ந்த பல்லடம், ராயா்பாளையம் தேவிகா மற்றும் அவருடன் இருந்தவா்கள் நிலத்துக்குள் வரக்கூடாது என தடுத்தனா்.
இந்த நிலம் 120 ஆண்டுகளாக தற்போதைய வம்சா வழியினரின் அனுபவத்தில் இருந்து வருகிறது. இனாம் நிலங்கள் எங்களுக்கு சொந்தமானதாகும். இதனை சுவாதீனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என எதிா்ப்பு தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோயில் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தகாத வாா்த்தைகள் கூறி நிலத்துக்குள் வரக்கூடாதென பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனா். இது குறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா். இதையடுத்து அதிகாரிகள்அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.