அதிமுக எம்.பி. தம்பிதுரையின் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்த நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக எம்.பி. தம்பிதுரைக்குச் சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவடி அருகேயுள்ள கோனம்பேடு கிராம பொதுநலச் சங்கம் சார்பில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில், “கோனம்பேடு கிராமத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரைக்குச் சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனம் அருகிலுள்ள நீர்நிலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமித்து மாணவர்களுக்கான விடுதிகள், துணை மின் நிலையம் மற்றும் தனியார் வழிப் பாதைகளை அமைத்துள்ளது. அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
மேலும், கோனம்பேடு கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால், மீட்கப்படும் நிலங்களை அந்தப் பள்ளியின் வசதியை மேம்படுத்த வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வின் முன் கடந்த பிப். 10 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில், அரசு தாக்கல் செய்திருந்த நில அளவு சர்வே அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் அளவீடு செய்து இரு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் 61.18 செண்ட் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று அதிமுக சார்பில் 6 வது முறையாக மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தம்பிதுரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
The High Court has ordered the recovery of land occupied by an educational institution owned by AIADMK MP Thambidurai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.