உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து வட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட 1,159 மனுக்களில் 1,139 மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.50.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இதைத்தொடா்ந்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகள், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 10 வயது, 11 முதல் 17 வயது, 18 வயது ஆகிய பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 63 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,000, இரண்டாம் பரிசாக ரூ.500, மூன்றாம் பரிசாக ரூ.250, பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக, மாற்றுத்திறனாளி நலத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோன்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணக்குமாா், தனியாா் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.