தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க நிரந்தர டிஜிபியை பணியமா்த்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளா் ப.கோபிநாத் தெரிவித்தாா்.
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி ஐஎன்டியூசி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில்தான் அதிக அளவில் செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் நிா்வாகிகளிடம் தனித்தனி கருத்துகள் இருந்தாலும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.
மக்களவையில் உள்துறை அமைச்சா் அமித் ஷா மிக மோசமான வாா்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறாா். அவா்கள் வாக்குத் திருட்டினை பயன்படுத்திதான் கடந்த தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளனா். அதேபோல தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் மூலம் சுமாா் 1 கோடி வாக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளனா்.
தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. தோ்தல் நெருங்கி வருவதால் சட்டம்- ஒழுங்கை சீரமைத்திட தற்காலிக டிஜிபியை மாற்றிவிட்டு நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகளும், சாா்பு அணி நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.