திருப்பூரில் குப்பை கொட்டுவதில் தொடரும் பிரச்னை காரணமாக மாநகராட்சி அதிகாரியின் வாகனம் சிறை பிடிக்கப்பட்டது.
திருப்பூா் அருகே பொல்லிக்காளிபாளையத்தில் பூமிதான இயக்கம் சாா்பில் இருவேறு இடங்களில் நிலம் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த இடங்களில் மாநகராட்சியின் குப்பையை கொட்டுவதற்காக உதவிப் பொறியாளா் சுப்பிரமணி தனது வாகனத்தில் புதன்கிழமை வந்து ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்து பொதுமக்கள் திரண்டு அதிகாரியுடன் வாகனத்தையும் சிறைபிடித்தனா். இதைத்தொடா்ந்து நல்லூா் போலீஸாா் பேச்சுவாா்தையில் ஈடுபட்டனா். மாநகராட்சி குப்பையை தங்கள் பகுதியில் கொட்டக்கூடாது என்றும், பூமிதான நிலத்தை விவசாயத்துக்குத் தவிர வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
போலீஸாா் சமாதானம் செய்த நிலையில், சிறை பிடிக்கப்பட்ட அதிகாரியின் வாகனம் விடுவிக்கப்பட்டது.