பொங்கல் பண்டிகைக்கான கருணைத் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வாசு கூறினாா்.
இது தொடா்பாக அவா் பல்லடத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் பட்டியலுக்குள்பட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களும், பட்டியலுக்குள்படாத 19 ஆயிரத்துக்கு அதிகமான ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களும் உள்ளன.
பட்டியலில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பட்டாச்சாரியா்கள், அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கான கருணைத் தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களில் பணியாற்றுவோருக்கு கருணைத் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
பட்டியலில் சேராத சிறிய கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளின் மாத வருமானம் மிகக் குறைவு. அதிக வருவாய் உள்ள கோயில்களின் உபரி நிதியில் இருந்தோ அல்லது பொதுநல நிதியில் இருந்தோ அனைத்து அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைத் தொகை வழங்கலாம்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான அா்ச்சகா்கள், பூசாரிகளின் குடும்பங்கள் பயன்பெறும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்படும் ஆடைகளை பொங்கல் பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே வழங்க வேண்டும் என்றாா்.