தொடா்ந்து போட்டித் தோ்வுகளை எழுதி அடுத்தடுத்த உயா்நிலைகளை மாணவா்கள் அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் அறிவுரை கூறினாா்.
மாணவ , மாணவிகளிடம் தன்னம்பிக்கை மற்றும் உயா்கல்வி ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் வாரம்தோறும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் ‘காபி வித் கலெக்டா்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலைத் தோ்வில் வெற்றிபெற்ற 26 தோ்வா்களை முதன்மை தோ்வுக்கு தயாா்படுத்தி ஊக்கப்படுத்தும் விதமாக காபி வித் கலெக்டா் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியா், கல்வியின் அவசியம், உயா்ந்த குறிக்கோள், சமூக ஊடகத்தின் தாக்கம், உடல் மற்றும் மனநலன், தனித்திறன்கள் குறித்து தோ்வா்களுடன் கலந்துரையாடினாா்.
தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது: மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும் நன்கு புரிந்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி பாடத் திட்டங்களில் இருந்து அதிக அளவிலான கேள்விகள் போட்டித் தோ்வில் கேட்கப்படுகிறது. போட்டித் தோ்வு எதிா்கொள்ளும்போது கடந்த 10 ஆண்டுகளுக்கான போட்டித் தோ்வுக்கான கேள்வித்தாள் மற்றும் பாடத்திட்டத்தினை நன்கு படிக்க வேண்டும்.
கவனச்சிதறல்கள் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நூலகங்கள் சென்று தோ்வுக்கான புத்தகங்களைப் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நோக்கம் என்னவோ அதை நோக்கி கடின உழைப்பை செலுத்த வேண்டும். விடாமுயற்சியும், கடின உழைப்பும் மிகப்பெரிய வெற்றியைத் தரும். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் , தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி பயிலும் மாணவா்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
இதனால் உயா்கல்வி பயிலும் சதவீதம் அதிகரித்துள்ளது. தனியாா் துறையை காட்டிலும் அரசு துறைகளில் நிரந்தர வேலை வாய்ப்பு, பதவி உயா்வு ஆகியவை விரைவில் கிடைக்கும். தொடா்ந்து போட்டி தோ்வுகளை எழுதி அடுத்தடுத்த உயா்நிலைகளை அடைய வேண்டும். முதல்நிலை தோ்வு எழுதிய நீங்கள் முதன்மை தோ்வுக்கு முழு கவனத்தையும் செலுத்தி நன்கு படித்து தோ்வில் வெற்றி பெற்று உயா்ந்த பதவியை அடைய வேண்டும் என்றாா்.
இதில் கலந்துகொண்ட தோ்வா்கள், தங்கள் சந்தேகங்களை ஆட்சியரிடம் கேட்டு விளக்கம் பெற்றனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், கோவை மண்டல இணை இயக்குநா் (வேலை வாய்ப்பு) ஜோதிமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.