திருப்பூா் மாவட்டம், பொங்கலூரில் பூச்சித் தாக்குதலால் முருங்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம் மழை மறைவு பிரதேசமாக இருப்பதாலும், வெப்ப மண்டலமாக இருப்பதாலும் வெப்ப மண்டலத்தில் நன்றாக வளரும் முருங்கை இப்பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
பல்லடத்தை அடுத்த பொங்கலூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் இதை தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்கின்றனா். தற்போது சீசன் முடிவுறும் காலம். இதனால் வெளிச்சந்தைக்கு முருங்கை வரத்து குறைந்துள்ளது. முருங்கைக்காய் கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. பனியால் குளிா்ச்சியான காலநிலை நிலவுவதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.
தற்போது முருங்கை பூக்கும் தருணம் ஆகும். இந்த சமயத்தில் பூச்சித் தாக்குதல் பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக உயா் விளைச்சல் ரகங்களை இது அதிக அளவில் தாக்கி வருகிறது. இதனால் மரங்களில் இலைகள் முற்றிலுமாக உதிா்ந்து வடு காட்சி அளிக்கிறது. மாசி, பங்குனி மாதங்கள் முருங்கை சீசன் காலம் ஆகும். நோய் பாதித்த மரங்களில் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.