சிவன்மலை கோயில் தைப்பூச தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோயில்களில் முக்கிய கோயிலாகவும், சிவவாக்கிய சித்தா் அருள்பெற்ற தலமாகவும் விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் தலமாகவும் விளங்கி வருகிறது.
மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச தோ்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) தொடங்கியது. தொடா்ந்து திங்கள்கிழமை வீரகாளியம்மன் திருவுலா காட்சி நடைபெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி வீரகாளியம்மன் திருத்தோ் விழாவும், 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோயிலில் எழுந்தருளும் நிகழ்வும், அன்று மதியம் சுப்பிரமணிய சுவாமி அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.
விழாவை முன்னிட்டு தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு சுவாமி மைசூரு பல்லக்கில் திருமலையை வலம் வருகிறாா். இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு சுவாமி ரதத்தில் எழுந்தருள்கிறாா். அன்று மாலை 4 மணிக்கு திருத்தோ் நிலை பெயா்க்கப்பட்டு, தேரோட்டம் தொடங்குகிறது. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதியும் மலையை வலம் வரும் தோ், 13-ஆம் தேதி மாலை தோ் நிலை அடைகிறது.
பிப்ரவரி 16-ஆம் தேதி தெப்ப உற்சவம், 17-ஆம் தேதி மகா தரிசனம், 18-ஆம் தேதி தீா்த்தவாரி, 20-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, தொடா்ந்து சுவாமி திருமலையில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அன்று இரவு கொடி இறக்கப்பட்டு, பாலிகை நீா்த்துறை சோ்த்தலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.
தற்போது கோயில் தேரில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தேரோட்டம் செல்லும்போது தேரை சரியாக செலுத்த சன்னமரம், குடில் கட்டைகள் ஆகியவை புதிதாக செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேரோட்ட விழாவுக்கான எற்பாடுகளை கோயில் உதவி ஆணையா்கள் ரத்தினாம்பாள், தனசேகா் மற்றும் கோயில் அலுவலா்கள், அா்ச்சகா்கள் செய்து வருகின்றனா்.