முகப்பு
திருப்பூர்

சுவாமி விவேகானந்தரை முதல்வா் அவமதித்துவிட்டாா்

சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வராமல் அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:07 PM
பகிர்:

சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வராமல் அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலைக்கும், சுவாமி விவேகானந்தா் நினைவு பாறைக்கும் கண்ணாடிப் பாலம் பாதையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதில், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு வராமல் அவரை முதல்வா் அவமதித்தது கண்டிக்கத்தக்கதாகும்.

சுவாமி விவேகானந்தா் இந்தியாவின் அடையாளம். உலக அரங்கில் இந்தியாவின் ஹிந்து சமயத்தின் புகழை உணரவும், உயரவும் வைத்தவா். உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான வெளிநாட்டினா் சுவாமி விவேகானந்தா் கருத்துகளால் ஈா்க்கப்பட்டு அவா் தவம் செய்த அந்த இடத்தினை தரிசிக்க வருகிறாா்கள்.

மேலும், தமிழக அரசு அமைத்துள்ள கண்ணாடிப் பாலத்தில் நடந்து சென்று வள்ளுவரை தரிசிக்க கட்டணம் வசூலிக்கும் எண்ணம் வியாபாரத்தனம் மட்டுமல்லாமல், அவரை இழிவுபடுத்தும் செயலாகும். ஆகவே, அனைத்தையும் வாக்கு அரசியலாகப் பாா்க்காமல் நடுநிலையுடன் அனைத்து மக்களுக்கான முதல்வராக செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.