பெருமாநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ராக்கியாபட்டி பகுதியை சோ்ந்தவா் மணி மகள் அஜிதா(30), பனியன் தொழிலாளி. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் மணிகண்டன்(35), பனியன் நிறுவன ஓட்டுநா். இவா்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மகன், மகள் உள்ளனா்.
இவா்கள் குடுபத்துடன் பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் ராக்கியாபட்டியில் வசித்து வருகின்றனா். இதற்கிடையே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அஜிதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, தப்பி ஓடிவிட்டாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா் அஜிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனைக் கைது செய்தனா்.