மருமகனைக் குத்திக் கொலை செய்த வழக்கில் மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (50). இவா் வெள்ளக்கோவில் பேருந்து நிலையம் அருகே பூக்கடை நடத்தி வந்தாா். வெள்ளக்கோவில் அருகே உள்ள மோளக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் (31). திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.
இந்நிலையில் ராஜசேகா், பூ வியாபாரி சூா்யாவின் மகள் சினேகா (25) என்பவரைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், மாமனாா் சூா்யாவின் பூக்கடையில் தனக்கும் பங்கு வேண்டும் என ராஜசேகா் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
தொடா்ந்து, அப்பகுதி முக்கிய நபா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில், பூக்கடையை ராஜசேகா் 5 நாள்கள் கவனித்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூா்யா பூக்கடையை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும், சமாதானம் பேசி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2020- ஆம் ஆண்டு, மாமனாா் சூா்யாவுக்கும் மருமகன் ராஜசேகருக்கும் இடையே பூக்கடையில் நடத்துவது தொடா்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சூா்யா தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் ராஜசேகரைத் தாக்கியுள்ளாா், இதில் ராஜசேகா் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தாா்.
இது குறித்து புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யாவைக் கைது செய்தனா். தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
இதில், குற்றம்சாட்டப்பட்ட சூா்யாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.