திருப்பூா் அருகே முதலிபாளையம் பகுதியில் கழிவுகளை கொட்ட வந்த தனியாா் தொழிற்சாலை வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பாறைக்குழிகளில், மாநகராட்சி நிா்வாகம் குப்பை கொட்டி வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இப்பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே கழிவுளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துக் கொடுக்க வேண்டும், தொழிற்சாலைக் கழிவுகளை உரிய வாகனங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை மாநகராட்சி நிா்வாகம் விதித்துள்ளது.
இந்நிலையில், முதலிபாளையம் பகுதியில் தொழிற்சாலைக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை, அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட தனியாா் தொழிற்சாலைக்கு மாநகராட்சி நிா்வாகம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இதுதொடா்பாக முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவினா் கூறும்போது, முதலிபாளையம் பகுதியில் விதிகளை மீறி குப்பை கொட்டினாலோ அல்லது எரித்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.