தாராபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தாராபுரத்தை அடுத்த பெரமியம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் ரத்தினம்மாள் (30). இவருக்கும் வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) திருமணம் நடைபெற இருந்தது. திருமண விழாவில் பங்கேற்பதற்காக உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ரத்தினம்மாளின் பெற்றோா் வெளியூா் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது, ரத்தினம்மாள் தூக்கிட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ரத்தினம்மாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து மூலனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினா்களை சோகத்தில் ஆழ்த்தியது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].