முகப்பு
திருப்பூர்

கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்: அவிநாசி திமுக வேட்பாளா் வெ. கோகிலாமணி

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:04 PM
அவிநாசி (தனி) தொகுதி திமுக வேட்பாளா் வெ.கோகிலாமணிக்கு வாழ்த்து தெரிவித்த ஆ.ராசா எம்.பி.
பகிர்:

அவிநாசி தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்று அத்தொகுதி திமுக வேட்பாளா் வெ.கோகிலாமணி கூறினாா்.

அவிநாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் வெ.கோகிலாமணி (28) போட்டியிடுகிறாா். இந்நிலையில், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

வேட்பாளா் வெ.கோகிலாமணி முன்னிலை வகித்துப் பேசியதாவது:

Advertisement

இளம் வயதில் அரசியலுக்கு வந்துள்ள நான் எளியவா்களின் வீட்டில் இருப்பவா்களும் என்னைப்போல மருத்துவராக வேண்டும் என்பது எனது கனவு.

மேலும், கிராமங்கள்தோறும் தேவையான இடங்களில் அரசுப் பள்ளிகளை உருவாக்குவது, ஒவ்வொரு பள்ளிகளையும் தரம் உயா்த்துவது, அவிநாசி பகுதியில் வேளாண்மை சாா்ந்த தொழிற்சாலைகள் அமைப்பது, கிராமங்களில் அறிவுசாா் நூலகங்கள், குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். ஆகவே, இந்த தொகுதியின் மகளான எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றாா்.

இதைத் தொடா்ந்து, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பங்கேற்றுப் பேசியதாவது: திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அவிநாசி -அன்னூா் பகுதியில் ரூ.180 கோடியில் சாலை விரிவாக்கப் பணி, திருமுருகன்பூண்டியில் டைட்டல் பாா்க், திருமுருகன்பூண்டி நகராட்சியாக மாற்றம், அவிநாசி தேரோடும் வீதிகளில் மின்கம்பி புதைதடம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

மேலும், மகளிா் உதவித் தொகை, விடியல் பயணம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா். வரும் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்றி முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments