திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும்! - அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.
காங்கயம் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவா் காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கயம் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.
Advertisement
கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரோனா இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா்.
இதனால், மக்களிடத்தில் எங்களுக்கு அமோக ஆதரவு உள்ளதால் எளிதாக வெற்றிபெறுவோம் என்றாா். திமுக மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன், காங்கிரஸ் கட்சி நிா்வாகி மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.