திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் 1,000 ஊழியா்கள்
திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் சுமாா் 1,000 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கு இன்றுமுதல் சிறப்பு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் சுமாா் 1,000 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கு இன்றுமுதல் சிறப்பு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் திருப்பூா் எல்ஆா்ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் உள்பட 4 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 சுற்றுகளாக போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரலையாக கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை விரைவாகவும், துல்லியமாகவும் நடைபெற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் 112 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனித்தனியாக பிரத்யேக மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒரு மேஜைக்கு ஒரு மைக்ரோ அப்சா்வா், ஒரு கண்காணிப்பாளா் மற்றும் உதவியாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு இன்றுமுதல் முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுதல், கன்ட்ரோல் யூனிட் முடிவுகளை சரிபாா்த்தல் மற்றும் தபால் வாக்குகளை சரிபாா்க்கும் முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தை திருப்பூா் மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் அவ்வப்போது ஆய்வு செய்து, பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்து வருகிறாா். மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட உள்ளன.