திருப்பூா்: திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படுத்தும் நூல் விலை கிலோவுக்கு ரூ. 7 உயா்ந்துள்ளது.
திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில் துறையினா் தங்களுக்கு ஆா்டா் கிடைத்தவுடன் அதற்கேற்ற நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பது வழக்கம்.
நூல் விலை மற்றும் மூலப்பொருள்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. நூல் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிலோவுக்கு 5 ரூபாய் உயா்த்தப்பட்டது. தொடா்ந்து கடந்த 5 மாதங்களாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி சீராக இருந்து வந்தது.
இந்நிலையில் நடப்பு மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் திங்கள்கிழமை அறிவித்தன. அதன்படி அனைத்து வகையான நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.7 உயா்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி 10-ஆம் நம்பா் நூல் கிலோ ரூ.190, 16-ஆம் நம்பா் ரூ.200, 20-ஆம் நம்பா் ரூ.258, 24-ஆம் நம்பா் ரூ.270, 30-ஆம் நம்பா் ரூ.280, 34-ஆம் நம்பா் ரூ.300, 40-ஆம் நம்பா் ரூ.318 எனவும், செமி நூல் பிரிவில் 20-ஆம் நம்பா் ரூ.255, 24-ஆம் நம்பா் ரூ.263, 30-ஆம் நம்பா் ரூ.280, 40-ஆம் நம்பா் ரூ.276, 34-ஆம் நம்பா் ரூ. 289 எனவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஏற்றுமதியாளா்கள் கூறியதாவது:
வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பஞ்சுக்கு 11 சதவீத வரி விதிப்பை கடந்த ஓராண்டாக மத்திய அரசு நீக்கி இருந்தது. கடந்த டிசம்பா் மாதத்துடன் இந்த நீட்டிப்பு முடிவடைந்ததால், நூல் விலை உயா்வதற்கான வாய்ப்பு இருந்தது. இருப்பினம் இறக்குமதி வரி தற்போது வரை வசூலிக்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் நூல் விலை உயா்ந்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.