அவிநாசியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்றுப் பேசியதாவது: பேரிடா் காலத்தில் வழங்க வேண்டிய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு வழங்கவில்லை.
மேலும், திட்டப் பெயா்களில் மாற்றங்கள் உள்பட அனைத்திலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. குறிப்பாக 100 நாள் வேலைத் திட்டத்தில் 40% நிதியை மாநில அரசு தர வேண்டும். இத்திட்டத்தில் நாள்கள் குறைக்கப்படும். மேலும், பயனாளா்கள் தில்லியில் தான் முடிவு செய்யப்படுவாா்கள் எனக் கூறுகிறாா்கள்.
இதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான தமிழா்களின் நாகரீகத்தை கீழடியில் ஆய்வு செய்யுங்கள் என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறாா்கள். தற்போது வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்கிறாா்கள். நாம் மதத்தால் அல்ல, மொழியால் ஒன்றிணைந்துள்ளோம். சட்டப் பேரவைத் தோ்தலில் 175 முதல் 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மேயா் ந.தினேஷ்குமாா், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் சரவணன் நம்பி, திமுக பொறுப்பாளா்கள் திராவிட வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், தனலட்சுமி பொன்னுசாமி, அவிநாசியப்பன் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.