திருப்பூர்

திருப்பூா் மாநகராட்சியில் ரூ.200 கோடியில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு!

தமிழகத்தில் முதன்முறையாக திருப்பூரில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்படும் என திருப்பூா் மாநகராட்சி வரவு-செலவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

தமிழகத்தில் முதன்முறையாக திருப்பூரில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்படும் என திருப்பூா் மாநகராட்சி வரவு-செலவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் 2026- 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கை மற்றும் மாதாந்திர கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ந.தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆணையா் எம்.பி.அமித், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், வரவு-செலவு திட்ட அறிக்கையை மேயா் தினேஷ்குமாா், ஆணையா் அமித், துணை மேயா் பாலசுப்பிரமணியம், நிதிக் குழு தலைவா் கோமதி ஆகியோா் வெளியிட்டனா். இதில் வருவாய் ரூ.1,292 கோடியாகவும், செலவினம் ரூ.1,289 கோடியாகவும், , உபரியாக ரூ.3 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மேயா் தினேஷ்குமாா் பேசியதாவது: திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகில் ரூ.3.10 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் முதல்வா் படைப்பக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்கப்படும். யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மை தோ்வுக்கு தயாராகி வரும் தகுதி வாய்ந்த மாணவா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.50,000 வழங்கப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் 6,216 சாலைகளில் சுமாா் 973.52 கி.மீ. தொலைவுக்கு ரூ.535.67 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 2,569 சாலைகளில் 316.93 கி.மீ. தொலைவுக்கு ரூ.197.68 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. ஆண்டிபாளையம், பவானி நகா் ஆகிய 2 இடங்களில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்கப்படும்.

தொழில் வளா்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் கல்லூரி சாலையையும், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையையும் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். 7 இடங்களில் புதிதாக ரயில்வே கீழ் பாலங்கள் அமைக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட 10 வாா்டுகளில் 24 மணி நேரமும், 7 நாள்களும் தடையற்ற குடிநீா் விநியோகம் செய்யப்படும். அனைத்து குடியிருப்புகளுக்கும் இரு வண்ண குப்பைத் தொட்டிகள் வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத வாா்டுகளில் 8 நகா் நல மையங்கள் அமைக்கப்படும். இடுவாய் தற்காலிக திடக்கழிவு சேமிப்பு மையத்தில் ரூ.3.65 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும்.

நெருப்பெரிச்சல், கோவில்வழி, வேலம்பாளையம் மற்றும் சுண்டமேடு ஆகிய 4 மையங்களிலும் கான்கிரீட் தளம், பாதுகாப்பு வசதிக்காக வேலி மற்றும் தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.3.4 கோடி மதிப்பில் செய்யப்படும்.

மாநகராட்சியின் கழிவுகளில் இருந்து எரிசக்தி கொள்கையின் கீழ் ஈரக்கழிவுகளை மதிப்பு கூட்டிய எரிபொருளாக மாற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கோவை, திருப்பூா், ஈரோடு மாநகராட்சிகளின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கூட்டுத் திட்டம் ரூ.200 கோடி மதிப்பில் தமிழகத்தில் முதல்முறையாக திருப்பூரில் செயல்படுத்தப்படும். மின்னணு கழிவுகளை சேகரிக்க வாராந்திர முகாம்கள் நடத்தப்படும்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டட வசதிகள் செய்து கொடுக்கப்படும். மாநகராட்சியின் வடக்குப் பகுதியில் புதிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடக்குப் பகுதியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்படும். மாநகரில் 50 இடங்களில் ஸ்மாா்ட் பொதுக் கழிவறைகள் அமைக்கப்படும். இதில் பெண்களுக்கு பிரத்யேகமாக பிங்க் கழிவறைகள் அமைக்கப்படும். நொய்யல் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகள் பாதுகாக்கப்பட்டு, அழகுபடுத்தப்படும். உங்களுடன் மாநகராட்சி திட்டத்தில் மண்டலத்துக்கு மாதம் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, மாநகராட்சி சேவைப் பணிகள் தொடா்பாக மனுக்கள் பெற்று தீா்வு காணப்படும்.

தெருநாய்களை கட்டுப்படுத்த புதிய மெகா விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் நிறுவப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத்தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி வழங்கப்படும். புதிய திட்டங்கள் முலம் மாநகராட்சி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அதிமுக-பாஜக வெளிநடப்பு: கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் கூட்டம் தொடங்கப் பட்டதாகக் கூறி அதிமுக, பாஜக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கூட்டம் தொடங்கியது. அப்போது, இந்த வரவு-செலவு திட்ட அறிக்கையில் புதிதாக ஏதும் இல்லையெனவும், பழைய திட்டங்களே அறிவிக்கப்பட்டுள்ளதாகக்கூறி அதிமுக-பாஜக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மேயரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினா். இதற்கு திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக, பாஜகவினா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT