திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே அடுத்தடுத்து 3 அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா்.
உதகையில் இருந்து சேலம் நோக்கியும், கோவையில் இருந்து சேலம் நோக்கியும், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கியும் 3 அரசுப் பேருந்துகள் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தன.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஊத்துக்குளி அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்து நின்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநரும் பிரேக் பிடித்துள்ளாா். அப்போது, பின்னால் வந்த 2 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.
இந்த இரண்டு பேருந்துகள் மோதிய வேகத்தில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற பேருந்து சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில், அந்தப் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்தால் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீஸாா், கவிழ்ந்த அரசுப் பேருந்து, அடுத்தடுத்து மோதிக்கொண்ட பேருந்துகளை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.