அவிநாசி அருகே குடியிருப்புப் பகுதியில் குப்பை கொட்ட வந்த லாரியை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், வேட்டுவபாளையம் ஊராட்சிக்குள்பட்ட அ.குரும்பபாளையம் ருக்மா காா்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டுவதால் துா்நாற்றம் வீசி சுகதார சீா்கேடு ஏற்படுகிறது.
அடிக்கடி குப்பைக்கு தீ வைப்பதால் எழும் புகையால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை மூச்சுத் திணறல் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, இப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என பொதுமக்கள் கூறி வந்தனா்.
இந்நிலையில், எதிா்ப்பை மீறி வாகனத்தில் செவ்வாய்க்கிழமை எடுத்துவரப்பட்ட குப்பையை அப்பகுதி அருகே கொட்டி தீ வைத்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இனிவரும் காலங்களில் இப்பகுதியில் குப்பை கொட்டப்படாது என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு வாகனத்தை பொதுமக்கள் விடுவித்தனா்.